தமிழ்நாடு

மதுரை: ஒரே மாதத்தில் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

மதுரை: ஒரே மாதத்தில் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

kaleelrahman

மதுரையில் ஒரே மாதத்தில் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் மாநகர் பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மாநகர காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 251 ரவுடிகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 166 பேர் குற்ற பின்னனி உடையவர்கள் மற்றும் ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமும் பெறப்பட்டுள்ளது. அதேபோல் நன்னடத்தை காலத்தில் விதிமுறைகளை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 16 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 29 ரவுடிகளும், நகை மற்றும் பணப்பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 24 பேரும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் பிணையில் வரமுடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 32 எதிரிகள் கைது செய்யப்பட்டு அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ரவுடிகளிடமிருந்து 8 வாள், 8 கத்தி மற்றும் 3 அருவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் 15 ரவுடிகள் உட்பட 2021 ஆம் வருடத்தில் 72 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.