தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் 10 நாட்கள்தான் தாக்கு பிடிக்கும்: சு.வெங்கடேசன் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் 10 நாட்கள்தான் தாக்கு பிடிக்கும்: சு.வெங்கடேசன் எச்சரிக்கை

Veeramani

மதுரையில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் தனியார் மருத்துவமனைகளால் 5 நாள்களுக்கும், அரசு மருத்துவமனைகளால் 10 நாள்களுக்கும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 28ஆம் தேதி வரையிலான புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,068, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1,047, வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,105 என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடந்த பத்து நாள்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணித்தால் மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும். மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், நிலைமையைக் கைமீற விடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்டத்தில் தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மதுரை எம்.பி, மதுரை கோவிட் கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும், செயல்பாடும் தேவை என்று கூறியுள்ளார்.