தமிழ்நாடு

விஜயதசமி அன்று கோயில் திறப்பு குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் : உயர்நீதிமன்றம்

விஜயதசமி அன்று கோயில் திறப்பு குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் : உயர்நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை கேள்வி எழுப்பியிருந்தது. இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கான கால அவகாசமாக இன்று மதியம் 1.30 மணி வரை தமிழக அரசுக்கு நீதிமன்றம் நேரம் கொடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து மதியம் 1.30க்குப் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘இதுகுறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதுபற்றி அரசே முடிவெடுக்கலாம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக பொன்னுசாமி என்பவர் இதுகுறித்த வழக்கொன்றை அளித்திருந்தார். அதில், ‘ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமியன்று கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த மனநிலையை புரிந்துக்கொள்ளாமல், தமிழக அரசு தொடர்ந்து கோயில்களை மூடிவருகிறது. அப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமை கோயில்களை அரசு மூடியே வைத்திருக்கும். அப்படி இல்லாமல், கோயில்களை திறக்க வேண்டும்’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு மறுவிசாரணைக்கு இன்று மதியம் வந்தபோது, ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், ‘கொரோனா பரவல் அச்சத்தை தடுக்கவே அரசு வார இறுதி நாள்களில் கோயில்களை மூடிவருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீண்டும் நாளை மருத்துவக்குழுவுடன் கலந்தாலோசிக்க உள்ளார். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் இதுகுறித்து மீண்டும் ஆலோசிக்கிறோம். அதுவரை விஜயதசமியன்று கோயில் திறக்கப்படுமா இல்லையா என உறுதியாக சொல்லமுடியாது’ என கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதி, ‘இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இதுபற்றி தமிழக அரசே முடிவு செய்துகொள்ளட்டும்’ எனக்கூறி வழக்கை முடித்துவைத்தார்.