செய்தியாளர்: முகேஷ்
சக்தி முருகன் என்பவர், “செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் எனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்துவருகின்றனர். இதனை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் “கல்லை அங்கிருந்து அகற்றி தர வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது உரிமையியல் சார்ந்த பிரச்னை என்பதால் இதில் தலையிட முடியாது என்று காவல் துறையினர் மறுத்துவிட்டனர்” என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார் சக்தி முருகன்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.
சாலையில் நடப்பட்ட கல் சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இதற்காக வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்” என குறிப்பிட்டு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என்று பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.