சென்னை உயர்நீதிமன்றம் PT
தமிழ்நாடு

“கணவனின் 8 மணி நேர வேலையை, மனைவியின் 24 மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது”- சென்னை உயர்நீதிமன்றம்!

“குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் 24 மணி நேர வேலையை, கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PT WEB

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

‘கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது!’

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “கணவன் சம்பாதிப்பது என்பதும், மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனிப்பது என்ற இரண்டுமே பொதுவானது தான். குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது. இதனால் கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் “குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும் விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் ஒரு பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது” என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மனைவியின் பங்களிப்பை அங்கீகரிக்க சட்டம் இல்லை! அதே போல நிராகரிக்கவும் சட்டம் இல்லை!’

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குகிறார். ஆக, கணவன் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது” என உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு விவரங்களை காண:

second appeal 59.pdf
Preview