சவுக்கு சங்கர்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

"யூ-ட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது"- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

ஜெனிட்டா ரோஸ்லின்

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். தொடர்ந்து, தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார், பல பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிப்பரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தன்னை காவல்துறை கைது செய்யும் என்ற அச்சத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி “ஏராளமான யூ-ட்யூப் சேனல்கள் தேவையில்லாத சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது.

மேலும், நேர்காணல்களுக்கு வருபவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டு, இம்மாதிரியான விஷயங்களை உருவாக்குகிறார்கள். ஆகவே, யூட்யூப்பில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டுபவரை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” என்று கூறி, ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனு மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.