ஆர்.கே.சுரேஷ் கோப்புப் படம்
தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே. சுரேஷ் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!

ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவின் மீது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அதுவரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

PT WEB

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி எனக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஆருத்ரா நிறுவனம்

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகரும், தயாரிப்பாளரும், பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவின் துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தான் இப்போது வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, “ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போகிறேன். வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பவும்” என காவல்துறையிடம் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பப்பட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது, காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.