கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் கறுப்புப்பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்தனர். வருமான வரித்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்காத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. புகாரானது வழக்காக மாறுவதற்கு முன்பாகவே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட3 பேர் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.