தமிழ்நாடு

சுருக்கு மடி வலையில் மீன் பிடிக்க அனுமதி தர முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

சுருக்கு மடி வலையில் மீன் பிடிக்க அனுமதி தர முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

jagadeesh

கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 'சுருக்கு மடி வலை'யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்த உத்தரவை மறு பரிசீலனை செய்துள்ளது எனவும், சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவு செய்து தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மீனவர்கள் நலன் கருதி மீன்பிடி தொழிலை முறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.