கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதனையடுத்து, வீடியோ விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ1.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது. ‘கோடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூ நடந்து கொள்கிறார்’ என முதல்வர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவசர வழக்காக விசாரிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரத்திடம் முதல்வர் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச நீதிபதி கல்யாண சுந்தரம் தடை விதித்துள்ளார். ஆதாரமில்லாமல் ஆவணங்களை வெளியிடவும் தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும், மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.