ஒப்பந்த செவிலியர்கள் web
தமிழ்நாடு

ஒப்பந்த செவிலியர்கள்| மகப்பேறு சலுகைகள் வழங்க மறுக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

PT WEB

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்கள் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவிலியர்கள்

மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து, எம்.ஆர்.பி. செவிலியர் அதிகாரமளித்தல் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சலுகைகள் வழங்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது..

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செவிலியர்கள்

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகைகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒப்பந்த பணி நியமன நிபந்தனைகளைக் கூறி, மகப்பேறு சலுகைகளை மறுப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மகப்பேறு சலுகைகளை கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மூன்று மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.