தமிழ்நாடு

பாதுகாப்பு குறைபாடு புகார் - மதுரை ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பு குறைபாடு புகார் - மதுரை ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

rajakannan

வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சிபிஎம்  வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆவணங்களை எடுத்து சென்றது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். தாசில்தார் யாருடைய உத்தரவின் பேரில் விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த நிரஞ்சன், ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் எனவும் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். 

மேலும், இதுதொடர்பாக சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் யாருடையை அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவை பிறப்பித்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் எனவும் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிவு செய்திருக்கிறார். 

தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தலைமை தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான் செயல்பட்டுள்ளார் எனவும் தலைமை தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆணையம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கும்போது அதிகாரம் இல்லை என எப்படி கூறுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், உதவி தேர்தல் அதிகாரியையும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.