கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நிலசீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரிநிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த நிலையில், கோவிந்தசாமியின் மனைவி அளித்த மனுவின் அடிப்படையில் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோவிந்தசாமியின் வாரிசுகள் சிவராஜ், பாலாஜி, கிரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் நிறுவனம் ஆகியோர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிலத்தை மீட்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டதாகவும், அதன்பின்னர் நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்தததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “சட்டவிரோதமாக அபகரிப்பில் ஈடுபட்டு, மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது.
திட்டமிட்டு நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. பொது ஊழியர் என்கிற பெயரில் அரசு சொத்தை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நிலத்தையும், கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன்.
சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை நவம்பர் 4ஆஆம் தேதி தாக்கல் செய்யவும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.