Savukku shankar pt desk
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சவுக்கு சங்கரின் மீது குண்டர் சட்டம் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

PT WEB

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.

சவுக்கு சங்கர்

மனுதாரர் தரப்பில், “சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் அவர்” என்று வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், “சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதனை தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்” என விளக்கமளிக்கப்பட்டது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கெனவே முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

சவுக்கு சங்கர்

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில், அவர்மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழக்குகளில் ஜாமீன் பெற தேவையில்லை என்றால், உடனடியாக அவரை விடுதலை செய்யவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது