வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர்கள், தொழிலதிபர்கள் பலரும் இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு நுழைவு வரியை செலுத்தாமல், வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டே தள்ளுபடி செய்து விட்டபோதும், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதி சாடினார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் கூட, அதிகாரிகள் ஒழுங்காக வரி வசூலிக்கவில்லை என்று வெள்ளை அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார். வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு தாங்கள் உத்தரவிட்டதாகவும் அதன்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என கேட்ட நீதிபதி, அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான வழக்குகள் அனைத்திலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.