ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு துண்டுபிரசுரம் கூட வெளியிடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி ஆணவக்கொலை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது. ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து காவல்நிலையங்களிலும் சிறப்புப்பிரிவு அமைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனவும் ஆணவக்கொலையை தடுக்க விழுப்புணர்வுக்காக தமிழக அரசு ஒரு துண்டு பிரசுரத்தை கூட வெளியிடவில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
காவல்நிலையங்களில் சிறப்பு பிரிவு அமைப்பது சாத்தியமில்லாத விஷயம் எனவும் நாளை உதவி ஐ.ஜி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.