சசிகலா web
தமிழ்நாடு

“அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும்!” - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது தோழி என அறியப்படும் வி.கே சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் தன்னை நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் அமர்வில் நடைபெற்றது.

சசிகலாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

விசாரணையின் போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, “கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் அவர்களாகவே முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்துவிட்டனர். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அவர் தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பும் அவர்கள் தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்” என தெரிவித்தார்.

Sasikala

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், விதிகளின் படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும், கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, அதனால் சசிகலா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

Chennai High court

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அவரை நீக்கிய தீர்மானம் செல்லும் என உத்தரவிட்டுள்ளனர்.