தமிழ்நாடு

எம்.ஏ.எம். ராமசாமி வாரிசு விவகாரம்: தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

webteam

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து, எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் தத்தெடுத்த ஐயப்பன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார், செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தனது தந்தை எம்.ஏ.சிதம்பரத்தின் சகோதரரான எம்.ஏ.எம்.ராமசாமி, ஐயப்பனை தத்து எடுத்துக் கொண்டதாகவும் , இது நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். ஐயப்பனை தத்தெடுத்ததை ரத்து செய்த எம்.ஏ.எம்.ராமசாமி, தனது சொத்துக்களை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்தாகவும், மயிலாப்பூர் தாசில்தார் முன் வாரிசு சான்றிதழ் கேட்டு ஐயப்பன் விண்ணப்பித்தபோது, தானும், டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களது எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் அவர்கள் நேரில் ஆஜராகாமல், வழக்கறிஞர் மூலமே எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாலும், அதற்கான எழுத்துப்பூர்வர்மான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை என்றும், அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரிசீலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தபோது, வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், மனுதாரர் எந்த தகுதியும் இல்லை என்றும் தாசில்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வாரிசு சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளார்.