ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு pt web
தமிழ்நாடு

“எதிர்காலத்தில் அனுமதி மறுக்க கூடாது” ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

PT WEB

செய்தியாளர் : சுப்பையா

அக்டோபர் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு, மொத்தம் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டதாகவும், இதில்16 இடங்களில் அனுமதி நிராகரிக்கப்பட்டதென்றும் தெரிவித்தது. தொடர்ந்து ஆஜரான மனுதாரர் தரப்பு, “அணிவகுப்புக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் அரசும், காவல்துறையும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர்” எனக் கூறியது.

சென்னை உயர்நீதிமன்றம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்” என்று காட்டமாக கூறினார். மேலும் பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, “ஒரு மாவட்டத்தில் ஒரு இடங்களுக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கும் நிலையில், திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

அனுமதி நிராகரிக்கப்பட்ட, 16 இடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், “52 இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு “எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது” என்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ‘குறிப்பிட்ட மதத்தினர் அதிகம் வாழும் பகுதி, எதிர் கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும்பகுதி’ என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.