கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
விருதுநகரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கவனக்குறைவாக மருத்துவம் பார்த்து பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகாசி ஊழியர்கள் மீதும் சாத்தூர் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன் என்றும், கர்ப்பிணிக்கான சிகிச்சை, சிசுவுக்கு தொற்று பரவாமல் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், ஹச்ஐவி தொற்றுடன் ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து ஜனவரி 3க்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.