தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் அசையா சொத்துகளுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்கி அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் எனவும் மனுதாரரான புகழேந்தி ஜெயலலிதாவின் எந்தச் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தது. 

அதாவது, வருமானத்தை மீறிய வகையிலான சொத்துக்களையா அல்லது, ஜெயலலிதா தனது வேட்பு மனுத் தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் முழு சொத்துவிவரங்களை அறியமுடியாத நிலை நீடிப்பதால் அவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.