Ponmudi  Twitter
தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடிக்கு வந்த புதிய சிக்கல்!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது.

PT WEB

1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது இவர் வருமானானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக கூறி, அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்தார். மே 13, 1996 முதல் மார்ச் 31, 2002 வரையிலான காலத்தை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு 2002 மார்ச் 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

Court Order

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா உத்தரவு பிறப்பித்தார். அதில், “போதிய ஆதாரங்கள் இல்லை” எனக்கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

chennai high court

உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான் வழக்குகளை தற்போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். அவர் சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து வழக்கு பதிந்து, அதை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் 124வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அல்லது மாலையில் இது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, எந்த காரணத்திற்காக வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க எடுத்துள்ளது என லஞ்ச ஒழிப்புத்றை தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கி கூறுவார்.