பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், “சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, “சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவித்து வந்தார். ஆகவே அதனை தடுக்க கூடிய வகையிலேயே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்” என விளக்கமளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது. அதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம். ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு. சவுக்கு சங்கருக்கு எங்கு இருந்து அந்த தகவல்கள் வந்துள்ளன என பாருங்கள்.
காவல்துறையில் நடைபெறும் பிரச்னைகளை அவர் வெளிப்படுத்துகிறார் என்றால் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்தானே தகவலை அளித்திருக்க முடியும். ஏன் இதுபற்றி விசாரிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, “திரைப்படங்களில் போலீசார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. அப்படியென்றால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கொண்டு செல்லும்” எனவும் நீதிபதிகள் கூறினார்.
பின் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.