பார்முலா 4 கார் ரேஸ் - சென்னை உயர் நீதிமன்றம் puthiya thalaimurai
தமிழ்நாடு

சென்னை: தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் - நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னையில் தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: முகேஷ்

சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், வீதி பந்தயம் என்கிற பெயரில் தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரின் பிற பகுதிகளில் கார் பந்தயத்தை நடத்தப்படுகிறது. அவற்றுக்கு தடை விதிக்கக் கோரி ஸ்ரீஹரீஷ், லூயிஸ் ராஜ், மதுரைவீரன், பாலுசாமி என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நடைபெற்றது.

Formula 4

அப்போது மனுதாரர்கள் சார்பில், “கார் பந்தயம் நடத்த அரசு 42 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. அரசு பொது மருத்துவமனைகள் அருகில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தரப்பில், “கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இதை நீதிமன்றம் ஆராய முடியாது. இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போட்டியை ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடையில்லை என உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்கு இடையூறு இல்லாமல் உரிய நடவடிக்கை வேண்டுமென்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

பந்தயத்துக்காக அரசு செலவிட்ட 42 கோடி ரூபாயை அரசுக்கு திரும்பி அளிக்க வேண்டுமென பந்தயம் நடத்தும் ரேசிங் புரமோசன்ஸ் பிரைவேட் லிமிடட் (Racing Promotions Pvt Ltd) நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.