ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் PT Web
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V M சுப்பையா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருந்தார். பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து, கடந்த செப்டம்பர் 19ம் தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன்

இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஸ்வத்தாமனின் தாய் விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக எனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் மகனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது குறித்து எனக்கோ, அவரின் (அஸ்வத்தாமனின்) மனைவிக்கோ யாரும் தெரிவிக்கவில்லை. அஸ்வத்தாமனிடமும் உரிய காலத்தில் இந்த உத்தரவு மற்றும் ஆவணங்கள் வழங்கப்படவில்லை.

பூந்தமல்லி கிளை சிறையில் அஸ்வத்தாமன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புழல் சிறைக்கு இந்த உத்தரவை அனுப்பியது முறையற்றது. பொது அமைதிக்கு எந்த பங்கமும் விளைவிக்காத எனது மகன் அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அளித்த மனுவை அறிவுரைக் கழகம் முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியாக இருந்தவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், தேசிய கட்சியில் நிர்வாகியாக இருந்த எனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் சிறையிலடைத்தனர். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது நீதிமன்றம்.