ops case judgement puthiya thalaimurai
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு மீதான ஓபிஎஸ்-ன் மேல்முறையீடு வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜெ.நிவேதா

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இதன்மீது கடந்த மாதங்களில் 7 நாட்கள் வாதங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். அது இன்று விசாரணைக்கு வந்தது. அதன்மீது நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது.

அதில், மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். “தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அது கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆக தடை விதிக்க முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கும் தடை விதிக்க முடியாது” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அச்செய்தியில், “அஇஅதிமுக என்பது ஒன்றுதான். கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும். கட்சிக்கு எதிரானவர்களை அஇஅதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்றுள்ளார் இபிஎஸ்.