தமிழக மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்போதே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டது. அதில் ரத்த அழுத்தத்தில் வேறுபாடு இருப்பதாகவும், அதனால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பேரில் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை காலை 10.30 மணியளவில் செய்யப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தின் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது கணவரை அமலாக்கப்பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். இதையடுத்து, ‘புதிய அமர்வில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க பட்டியலிடப்படும். உரிய நடைமுறையைப் பின்பற்றி வேறு அமர்வில் வழக்கு விரைவாகப் பட்டியலிடப்படும்’ என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.