சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் - கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக கருத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் | "ரூ 10 லட்சம் கொடுத்தது தீய முன்னுதாரணம்" - உயர்நீதிமன்ற நீதிபதி

PT WEB

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள்’ எனும் தலைப்பில் நீரதிகாரம் எனும் புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நீரதிகாரம் நூல் எழுத்தாளர் அ.வெண்ணிலா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆர். சுரேஷ்குமார்

இந்நிகழ்வில், நீதியரசர் ஆர். சுரேஷ்குமார் பேசுகையில், “வடக்கே சுதந்திர போராட்டம் தீவிரமடையும் முன்பே தமிழகத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் போன்றோர் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இன்றைய நிலையில் தமிழகத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் இளைஞர்கள் சோம்பேறியாக வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் பாதி சம்பளம் பெறும் இளைஞர்கள் அதை ஒரு கடையில் கொடுத்து உண்மையான ‘குடி’மகனாக மாறிவிடுகின்றனர். அதிலும் சிலர் மலிவு விலையில் அவை கிடைக்கின்றாதா என பார்க்கின்றனர். அப்படி தேடிபோன ஒரு கூட்டம்தான் கள்ளக்குறிச்சியில் மாண்டு போகியுள்ளனர். இதற்கு 10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணத்தை தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும்” என பேசினார்.