கோகுல்ராஜ், யுவராஜ் twitter page
தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜ் உட்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதியன்று மாயமானார். அதற்கு மறுநாள் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அடுத்தடுத்து நடந்த விசாரணையில் ஜூன் 23 அன்று, கடைசியாக கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவியொருவரை (வேற்று சமூகத்தை சேர்ந்தவர்) கோயிலில் சந்தித்தது தெரியவந்தது. கோயிலில் சிலர் கோகுல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டதும் உறுதியானது.

அதன்பின் நடந்த அடுத்தடுத்த விசாரணைகளில், இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள் செந்தில், கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

என்ற தீர்ப்பை வாசித்தனர்.