சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதலில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் நிற்கும் அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக கட்சி விதிப்படி, அதிமுக அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், பொதுக்குழுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா 2012-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிதான் மீண்டும் சேர்க்கப்பட்டதாக கூறியுள்ள மதுசூதனன், 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுகவில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்ற விதியை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது ஆட்சேபனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை நிராகரிக்க வேண்டும் என்று மதுசூதனன் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.