தமிழ்நாடு

ரசாயன‌ கிடங்கில் பயங்கரத் தீ: தொடரும் தீயணைப்பு பணி

ரசாயன‌ கிடங்கில் பயங்கரத் தீ: தொடரும் தீயணைப்பு பணி

jagadeesh

சென்னை மாதவரம் ரசாயன கிடங்கில் தீயை அணைக்கும் பணி 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

3 ரசாயன கிடங்குகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தீக் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், முழுமையாக தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு கிடங்குகளின் உட்புறப் பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
புகை மூட்டமாக காணப்படுவதால் அந்த பகுதியை நெருங்குவதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கிடங்குகளின் சுற்றுச் சுவரை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்திவிட்டு, தீ எரியும் பகுதியை நோக்கி முன்னேற தீயணைப்பு வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, மாதவரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால், முதலுதவி அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தீ விபத்து காரணமாக பெருமளவில் புகைமண்டலம் உருவாகி அப்பகுதி முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்தது போல் காட்சியளித்தது. இந்த தீ விபத்தை அறிந்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர்.

இரவு எட்டரை மணிக்கு அந்தப் பகுதியில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 403 PPM என்ற அளவில்‌ இருந்தது கணக்கிடப்பட்டது. இதனால் மாசு அதிகரித்திருப்பதால் குழந்தைகள், முதியவர்களுக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீ எரிவதால் காற்று மாசின் தரம் மேலும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில்‌ தகவல் தெரிவிக்கப்படுகிறது.