M.subramaniam கோப்புப்படம்
தமிழ்நாடு

“தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்” - மா.சுப்பிரமணியன்!

வருகிற 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

webteam

உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்திருந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றுள்ளார்.

dengue

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும்.

மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். அனைத்து துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

medical camp

2012-ல் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகளும், 2017-ல் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 65 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தற்போது 476 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 805 நடமாடும் மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வருகிற 1ஆம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

madurai aiims

தற்போது மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் கட்டடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்க உள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இதனை ஒன்றிய அரசிடம்தான் கேட்க வேண்டும்” என கூறிச்சென்றார்.