தமிழ்நாடு

இளம் பெண் கவுசல்யாவிற்கு உரிய நீதி கிடைக்குமா? - ஸ்டாலின் கேள்வி

இளம் பெண் கவுசல்யாவிற்கு உரிய நீதி கிடைக்குமா? - ஸ்டாலின் கேள்வி

webteam

இளம் பெண் கவுசல்யாவிற்கு உரிய நீதி கிடைக்குமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை, தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலையும் - தண்டனைக் குறைப்புமே தீர்ப்பாக வந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல், சட்டரீதியாக அணுகுவதே திமுகவின் வழக்கம். இந்த வழக்கின் தீர்ப்பை சட்டரீதியாகப் பார்க்கும்போது, சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர் அவர், “அரசுத் தரப்பில் உரிய ஆவணங்களை, ஆதாரங்களை, சாட்சிகளை முன்வைத்திருக்க வேண்டிய காவல் துறை, தன் கடமையிலிருந்து தவறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார். அது இதுபோன்ற நேரங்களில் சொல்லப்படும் சம்பிரதாயமான வார்த்தைகளா, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையா, காவல் துறை அப்போதாவது தன் கடமையைச் செய்யுமா, இளைஞர் சங்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது காட்சியாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் உரிய சாட்சியத்துடன் நிரூபித்து, இளம்பெண் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.