தமிழ்நாடு

இனி ஏப்ரல் 14 `சமத்துவ நாள்’! - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இனி ஏப்ரல் 14 `சமத்துவ நாள்’! - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றியபோது, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார்.

இன்று இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும். அம்பேத்கர் மணி மண்டபத்தில் வெண்கலத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்படும். அண்ணல் அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதை சேர்த்த ஓவியர்” என்று கூறி அம்பேத்கருக்கு புகழாரம் செய்தார்.

சமத்துவ நாள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து, `தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும்’ என விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருக்கிறார். முன்னதாக 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலில் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி என்று குறிப்பிடப்பட்டுதான் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.