சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடலூர் - பண்ரூட்டியில் செல்வமுருகன் என்பவர் நெய்வேலி நகரக் காவல்நிலையப் போலீஸாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருக்கிறார். சாத்தான் குளம் இரட்டைக் கொலைக்குப் பிறகு, உயர்நீதிமன்றமே எச்சரித்தும் போலீஸ் டார்ச்சரும், அதனால் கஸ்டடி மரணங்களும் தொடருகிறது" என்றார்.
மேலும் "அதிமுக ஆட்சியில் காவல்துறை சரியான வழிக்காட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது. செல்வமுருகனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மையான வழக்கிற்காகவா , பொய்ப் புகாரிலா, ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார் தாக்கிய போலீஸ் யார் யார் ? காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி ? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் ? " என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் "இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் மறைத்து, தமிழக காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் முதலமைச்சர் சீர்குலைத்து விட வேண்டாம்" என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.