கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கினார் வைரமுத்து. இதனைத்தொடர்ந்து விழாவில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து, “பத்து வயதில் இருந்து குடிப்பதற்கு கற்றுக் கொண்டிருக்கிற ஒரு இளம் கூட்டத்தை தமிழ்நாட்டில் தயாரித்ததற்கு யார் பொறுப்பு? அரசாங்கம் மட்டுமே பொறுப்பா? மதுக்கடைகள் மட்டுமே பொறுப்பா?
கள்ளச்சாராயம் காய்ச்சுகிற ஊரிலேயே தான் நாமெல்லாம் அதை பார்க்காமலே திரும்பாமலே வாழ்ந்து வந்தோம். எத்தனை பேருக்கு பீடி வாங்கி வந்து கொடுத்திருப்பேன்? எத்தனை பேருக்கு சிகரெட் வாங்கி வந்து கொடுத்திருப்பேன்? எத்தனை பேருக்கு, என் உறவினர்களுக்கு சுருட்டு வாங்கி வந்து கொடுத்திருப்பேன்? ஆனாலும் நான் புகைத்ததில்லையே.. அப்படியானால் ஒழுக்கம் என்பது புறச் சூழல்களால் அமைவது மட்டுமல்ல, அகச் சூழல்களால் அமைவது ஒழுக்கம் என்பதை ஆசிரிய பெருமக்களும் பெற்றோர்களும் எங்கள் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பீர்கள்?
நான் மிக மிக வருத்தப்படுவது கிராமப்புற வாழ்க்கையிலும் நகர்புற வாழ்க்கையிலும் குடியின் பெருக்கம் மனித வாழ்வை தின்று கொண்டிருக்கிறதே என்பதுதான். மேல்நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது பெரியவர்களே. மேல்நாட்டில் குடிக்காதவன் இல்லை; மேல்நாட்டில் குடி ஒரு குற்றமில்லை; மேல்நாட்டில் குடி என்பது உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. கொஞ்சம் சாண்ட்விச், கொஞ்சம் ரொட்டி, கொஞ்சம் இறைச்சி, ஒரு முட்டை, ஒரு விஸ்கி, ஒரு பிராந்தி, ஒரு பீர்.. இது என்பது அவர்களுடைய சராசரி உணவு. இட்லிக்கு சட்னி, சாம்பாரை தொட்டுக் கொள்வது மாதிரி. ஆனால் என்ன வேறுபாடு என்றால், மேல்நாட்டில் மதுவை அவன் குடிக்கிறான். நம் நாட்டில் மது மனிதனை குடிக்கிறது.
14.6 விழுக்காடு தமிழ் மக்கள் குடிக்கிறார்கள் என்றால் இதை நான் எங்கு போய் சொல்லி அழுவது? நான் அரசாங்கத்துக்கு விரோதமாகவோ சார்பாகவோ பேசவில்லை. நான் மதுவுக்கு விரோதமாக சமூகத்திற்கு சார்பாக பேசுகிறேன். போதையிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பதும் மீட்பதுமே கல்வியினும் தலையாயது'' என்று கூறினார்.