தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.