சென்னை அருகே போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்துவந்த விஜய் என்ற நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கிருந்து 300 வலி நிவாரண மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, 36 ஆயிரம் ரூபாய் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் என்றும், விபத்து காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் அவரது காதலி ஜாஸ்மினுக்கும் தொடர்பு இருப்பதால், அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.