தமிழ்நாடு

தகாத உறவுக்காக கணவனைக்கொன்று, கயிற்றால் சிக்கிய மனைவி

தகாத உறவுக்காக கணவனைக்கொன்று, கயிற்றால் சிக்கிய மனைவி

webteam

சென்னை அண்ணாநகரில் கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் கோபி - சுமித்ரா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் கலைச்செல்வன், இவரும் டிரைவராக உள்ளார். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்றிரவு கலைச்செல்வன் - கோபி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான போதையில் கோபி இருந்ததால், அவரை கலைச்செல்வன் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். அப்போது கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிய சுமித்ரா, அவர்களது உதவியுடன் கணவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அங்கு கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும் கோபியின் கழுத்தில் கயிற்றால் நெரிக்கப்பட்ட காயம் இருந்ததால், அவரது மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து  டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

விசாரணையில், ‘கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி மீது டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பதும், தனது மனைவிக்கும் கலைச்செல்வனுக்கும் தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டியிருப்பதும், காவல்துறையினர் சுமித்ராவை அழைத்து எச்சரித்து கோபியுடன் அனுப்பி வைத்துள்ளதும்’ தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சுமித்ராவிடம் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் சுமித்ரா தனது காதலன் கலைச்செல்வனுடன் சேர்ந்து, கணவனை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். 

இந்தக்கொலையை திட்டமிட்டு அவர்கள் செய்தது விசாரணையில் தெரியவந்தது. கணவனை கொலை செய்வதற்கு ஏற்றவாறு தனது இரு குழந்தைகளையும் தனது தாய் வீட்டுற்கு அனுப்பியுள்ளார் சுமித்ரா. தங்களது திட்டப்படி கோபிக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, அவர் போதையில் இருக்கும் போது கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். தற்போது கலைச்செல்வனும், சுமித்ராவும் கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கணவர் கோபியை கொலை செய்ததாக சுமித்ரா வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.