நஷ்டத்தில் இயங்கிவரும் ரயில்களை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே தனியார் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது. நிதிச் சுமையைப் பயணிகள் மீது சுமத்தாமல், வருவாயை அதிகரிப்பது குறித்தும் புதிய திட்டங்களை ரயில்வே நிர்வாகம் சிந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நஷ்டத்தில் இயங்கி வரும் ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் உள்ளிட்ட ரயில்கள் இயக்கத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக நீலகிரி மலை ரயில், மேற்குவங்கத்தின் சிலிகுரி மற்றும் டார்ஜிலிங் ரயில், இமாச்சலப்பிரதேசத்தின் ஷிம்லா-கல்கா மலைரயில் உள்ளிட்ட 1,08,000 கி.மீ. நீள ரயில் பாதையை தனியாருக்கு குத்தகைக்கு விட ரயில்வே முடிவு செய்துள்ளதாக ஆங்கில வணிக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவையானது, யுனெஸ்கோ அமைப்பால் உலகின் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.