டெபாசிட் தொகை ஏன் வாங்கப்படுகிறது? பதிவான மொத்த வாக்குகளில் எத்தனை சதவீதம் வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால் கட்டிய டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியும்? ஈரோடு இடைத்தேர்தலில் யார் யார் டெபாசிட் இழந்தார்கள்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,642 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் இருவரை தவிர இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர், தேமுதிக உள்பட ஏனைய 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.
அதுசரி டெபாசிட் தொகை என்பது என்ன? அது எத்தனை வாக்குகள் பெற்றால் திருப்பி கொடுக்கப்படும் என்ற விவரங்களை இங்கே காணலாம்.
எதற்காக டெபாசிட் தொகை?
தேர்தல் பாதுகாப்பு வைப்புத்தொகை என்பது ஒரு வேட்பாளர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் செலுத்த வேண்டிய வைப்பு தொகையாகும். பொழுதுபோக்குக்காகவும், விளம்பரத்திற்காகவும் போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்கில் தேர்தல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும் - தொகை விவரம்
டெபாசிட் தொகை தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும். நாடாளுமன்ற எம்.பி.தேர்தலுக்கு டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் இந்த தொகையில் பாதியாக ரூ.12,500 செலுத்தினால் போதும். இதுவே சட்டமன்றத் தேர்தல் அல்லது கவுன்சிலர் தேர்தல் என்றால் ரூ.10,000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.5,000 செலுத்த வேண்டும். குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் கூட ரூ.15,000 டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
டெபாசிட் காலி
குறிப்பிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால் மட்டுமே கட்டிய டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியும். அதாவது ஒரு தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருந்தால் அதில் ஆயிரம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குளைப் பெறவில்லை என்றால் வேட்பாளர் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
என்ன ஆகும் டெபாசிட் இழப்பு தொகை?
ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை கடைசித் தேதிக்குள் வாபஸ் பெற்றாலோ அல்லது வாக்குப்பதிவுக்கு முன்பாக மரணமடைந்தாலோ, அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும். தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் டெபாசிட் பணம் திரும்ப கொடுக்கப்படும். இப்படி டெபாசிட்டை இழக்கும் வேட்பாளர்களின் பணமானது தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்.
ஈரோடு இடைத்தேர்தலில் யார் யார் டெபாசிட் இழந்தார்கள்?
ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இரவு 8.30 மணி நிலவரப்படி கிட்டதட்ட 1,10,000 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் பிடித்துள்ள அதிமுக வேட்பாளர் கிட்டதட்ட 44 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் சுமார் 1,70,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால், ஆறில் ஒரு பங்கு என்பது 28,400 வாக்குகள் வருகிறது. அதனால், அதிமுக டெபாசிட் வாங்கிவிட்டது. ஆனால், நாம் தமிழர் கட்சி 10,800 வாக்குகளும், தேமுதிக 1,431 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்துள்ளது.
அத்துடன், இந்து திராவிட கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி, சமாஜ்வாடி கட்சி, வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம், தேசிய மக்கள் கழகம், நாடாளும் மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே), அனைத்து இந்திய ஜனநாயக மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.