மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக அமைய இருக்கிறது, 18 ஆவது மக்களவை தேர்தல். இதற்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில், சில கட்சிகளில் வேட்பாளர் அறிவிப்பத்தில் சிக்கல் இருந்தது. அது இப்போது ஓரளவுக்கு சரியானபோதும், சின்னம் குறித்தான கோரிக்கைகளும், மனுக்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக சிறிய கட்சிகளான, அதேநேரம் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளான மதிமுக, விசிக, நாதக போன்ற கட்சிகள் இந்த பிரச்னையில் கடுமையாக சிக்கி உள்ளன. என்ன பிரச்னை, இக்கட்சிகளின் தற்போதைய நிலை என்ன என்பதை இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
“இந்த மக்களவை தேர்தலில், எங்களுக்கு பம்பரம் சின்னத்தை வழங்கவேண்டும்” என மதிமுக நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்துள்ளது. அதை நீதிமன்றமும் தற்போது ஏற்றுள்ளது.
திமுக கூட்டணியுடன் 18 ஆவது மக்களவை தேர்தலை களம் காண இருக்கும் மதிமுக, திருச்சி மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளது. துரை வைகோ போட்டியிடும் அத்தொகுதியில், பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதிமுக அளித்த அந்த விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நேற்று (மார்ச் 26) உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, இன்று காலை இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் மதிமுக வழக்கறிஞர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அதில், “ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை மதிமுகவிற்கு ஒதுக்க முடியாது” என பதில் அளித்துள்ளது.
பிற்பகல் 2.15-க்கு இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றமும், “மதிமுக-விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட்டால்தான் அப்படி ஒதுக்க முடியும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், இவ்வழக்கில் தற்போது தீர்வு காண இயலாது. மேலும் மதிமுக 2010-ல் அங்கீகாரத்தை இழந்துவிட்டது” எனக்கூறியுள்ளது.
இதனால் வேறு எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என மதிமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2024 மக்களவை தேர்தலில், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் என 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக விசிகவை கேட்டுக்கொண்ட நிலையில், 1 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் பானை சின்னத்திலும் போட்டியிட்டது விசிக. மேலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் பானை சின்னத்தில்தான் போட்டியிட்டது.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் களம் காண்கின்றனர். இதில் பானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் விசிக உறுதியோடு உள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையத்தால் சின்னம் உறுதிசெய்யப்படவில்லை.
இருப்பினும் தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதை சுட்டிக்காட்டி, தங்களுக்கு பானை சின்னத்தினை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது விசிக. அதில் தற்போது வரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
எனவே, தங்களுக்கு பானை சின்னத்தினை ஒதுக்ககோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கினை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரியுள்ளது. விசிக தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்துதான், விசிக-விற்கு பானை சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
இதுதொடர்பாக பேசுகையில், “தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது” என திருமாவளவன் அதிரடி கருத்துகளை முன்வைத்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திருமாவளவன், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், “சின்னம் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை.
பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஆணையம் உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் எதிரணியில் இருப்பவர்களுக்கு சின்னம் தராமல் இழுத்தடிக்கிறது.
தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. நேர்மையோடு இத்தேர்தலை நடத்தவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல், குறிப்பாக ஆளுங்கட்சியின் சார்பு இல்லாமல் இத்தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியோடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் எப்போதும்போல தனித்து களம் இறங்குகிறது நாம் தமிழர் கட்சி.
இதற்காக, 40 வேட்பாளர்களின் பட்டியலையும் சீமான் அறிவித்துவிட்டார். இதில், 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால், வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பதில்தான் குழப்பம்.
கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பதால் இம்முறையும் அச்சின்னத்தில்தான் அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒரே சின்னமும், பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தனி சின்னம் ஒதுக்குவதும் வழக்கம்.
இதன் அடிப்படையில்தான் மதிமுக-விற்கு சின்னம் மறுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதன் அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னம்தான் வேண்டும் என்றால் முன்கூட்டியே அக்கட்சி விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். ஆனால், சரியான நேரத்தில் அக்கட்சி விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இவர்கள் விண்ணப்பிப்பதற்குள் அச்சின்னம் கைமாறி குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
அப்படி கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கப்பெற்ற கட்சி, பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நாடியபோதும் நா.த.க-வுக்கு சாதகமான சூழல் நிலவவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தினை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து மைக் சின்னத்தையே அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக இதுகுறித்து நாதக கட்சியின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தெரிவிக்கையில், ”பாஜக, திமுக போன்ற கட்சிகள் இணைந்து நாம் தமிழர்களுக்கு எதிராக பெரிய நெருக்கடி கொடுத்து வருகின்றன. எதுவுமே செய்யாதவர்கள் வீட்டில் ரெய்டு விட்டனர். அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பின் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை அவர்களே அறிந்து கொண்டனர்.
இதையடுத்து வேறு எப்படி எங்களின் மன உறுதியை உருக்குலைப்பது என்று யோசித்தார்கள். அதில் எங்களின் கரும்பு விவசாயி சின்னத்தில் கை வைத்துவிட்டனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என நான்கு தேர்தல்களில் இந்த சின்னத்தை கொண்டுதான் நாங்கள் வெற்றி அடைந்தோம்.
கரும்பு விவசாயி சின்னம் என்றாலே நாம் தமிழர் கட்சிதான் என்ற எண்ணம் மக்களிடையே பிறந்துவிட்டது. மேலும் 7 விழுக்காடு வாக்கு வைத்துள்ள தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்கின்ற நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பிடுங்கி, ஊர், பெயர் தெரியாத கட்சிக்கு கொடுத்துவிட்டு வஞ்சனை செய்திருப்பது எங்களுக்கு பெரிய பயத்தை உண்டாக்கியுள்ளது.
ஏனென்றால், இவர்கள் எப்பொழுது வேண்டுமானால் என்னவேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். வேட்பு மனுத்தாக்கலை கூட நிராகரிக்கும் அளவிற்கு இறங்கக்கூடியவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த நோக்கமே தமிழ்நாட்டில் நாங்கள் போட்டியிட கூடாது என்பதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், “ஒருவேளை நாங்கள் கூட்டணி வைத்திருந்தால், எங்களுக்கும் சின்னம் கிடைக்கும். இப்போது என்ன செய்வது என்று திணறுகிறேன்” என வேதனையோடு இன்று பேசியிருந்தார்.
தொடரும் இப்பிரச்னைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் நம்மிடையே தெரிவிக்கையில்,
“32 லட்சம் ஓட்டுவாங்கிய கட்சியின் சின்னத்தினை பிடுங்கி, 70 வாக்கு வாங்கியவர்களிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அந்த அடையாளம் தெரியாத கட்சியில் இருந்து 4 பேர் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘நாங்கள் கர்நாடகா கட்சி’ என்று சொல்லாதீர்கள்.
ஏன் மைக், ஒயர் மாதிரியான வேறு சின்னம் இல்லையா கொடுப்பதற்கு? கரும்பு விவசாயி சின்னத்தைதான் கொடுக்கவேண்டுமா? ‘தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி, நாம் தமிழர் கட்சிதான்’ என்று அன்று சீமான் கூறியபோதே, இவர்களை பின்தள்ளிவிட்டு அந்த இடத்தில் வந்து உட்கார வேண்டும் என்று பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் முடிவு செய்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வரும் இந்த விமர்சனங்களுக்கு இன்று பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, “தேர்தல் ஆணையம் சுதந்திரமாகத்தான் இயங்குகிறது. சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும்” என்றார் உறுதியாக. அவர் அளித்த முழுமையான விளக்கத்தை இங்கே காணலாம்:
தேர்தல் நெருங்கும் சூழலில், சின்னம் தொடர்பான பிரச்னை அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.