9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 80 ஆயிரம் பேர் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 29 ஆயிரத்து 998 பதவிகளுக்கு 79ஆயிரத்து 433 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான 140 இடங்களுக்கு 827 பேர் போட்டியிடுகின்றனர். ஆயிரத்து 381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6 ஆயிரத்து 64 பேர் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 901 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 10 ஆயிரத்து 792 பேரும் 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 61 ஆயிரத்து 750 பேரும் போட்டியிடுகின்றர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 5 பேர் கிராம ஊராட்சி தலைவர்கள் 119 பேர், 2 ஆயிரத்து 855 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் 418 பதவியிடங்களுக்கு ஆயிரத்து 386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 365 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.