தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் வார்டுகள் வரையறை விஷயத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் இன்று செய்யவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும் என்றும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காலக்கெடுவுக்குள் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆஜரான தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு சட்டப்பிரிவு 28-ன் கீழுள்ள பிரிவுகளை தமிழக அரசு நீக்கியதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடியாததுமே காரணம் என விளக்கமளித்திருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
மேலும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். எனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் வார்டுகள் வரையறை விஷயத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யவில்லை.
மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “ ஊரக பகுதிகளில் வார்டுகள் மறுவரையறை முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15-க்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். நகர்புற பகுதிகளில் வார்டுகள் மறுவரையறை முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 30-க்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் இடஒதுக்கீடு படி வார்டுகளை அரசு ஒதுக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டியது அவசியம். அவ்வாறு அறிவிப்பாணை வெளியிட்டு வார்டுகள் மறுவரையறைக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த அடுத்த மூன்று மாதத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.