தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற இருக்கிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது.
இந்த போட்டிகள், ஆக.30-ம் தேதிமுதல் தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை மாறியுள்ளது. இதற்காக 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப்பந்தயத்தை சென்னையின் மையப்பகுதியில் நடத்த பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், எஃப் ஐ ஏ எனும் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு சான்று மற்றும் போக்குவரத்து பிரச்னை இல்லாததற்கு உத்தரவாதம் என தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் கார் பந்தயத்தை நடத்த அனுமதியளித்தது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது குறித்து பேசியிருக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகன், சென்னையின் மையப்பகுதியில் இதை நடந்தவேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ விளையாட்டை ஊக்கவிக்க வேண்டியது நம் கடமை. ஆனால் சென்னையின் மையப்பகுதியில் அதை நடத்த வேண்டுமா?. கார் பந்தயத்தை சென்னைக்கு பதில் ஸ்ரீபெரும்புத்தூரில் நடத்தி இருக்கலாம், பெரும்புத்தூர் அருகே போட்டி நடத்த கட்டமைப்பும் உள்ளது, மக்களும் அதிகளவில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் ஃபார்முலா 4 பந்தயப் பாதையில் மது விளம்பரங்கள் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அன்புமணி, “சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதையில் மறைமுக மது விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதைப்பார்க்கும் மக்களுக்கு அதுபோலான பானங்களை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இளைஞர்களை சீரழிக்கும் மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும், மது விளம்பரங்களை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது” என்று மிகப்பெரிய நீண்டபதிவை வெளியிட்டுள்ளார்.