தமிழ்நாடு

பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்.கே.ஜி., யு.கே.ஜி, வகுப்புகள் தொடங்கப்படும் - செங்கோட்டையன்

webteam

பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழிக் கல்விக்காக அங்கன்வாடி மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஜனவரி மாதம் இறுதிக்குள் பின்னலாடை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்படும். இதனால் இப்பகுதியில் உள்ள 7500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல் ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் ''அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு சீருடைபோல் வழங்கப்படும் பள்ளி சீருடைகளுடன் சேர்த்து அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சீருடை மாற்றியமைக்கப்படும். பெற்றோர்கள் நமது குழந்தைகள் ஆங்கிலம் கற்கவேண்டும் என விரும்பினால் அந்தந்த பகுதிக்கு எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கொண்டுவரப்படும். இதுவரை சிஎஸ்ஆர் பண்ட் மூலம் 172 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் அமைக்கப்படவுள்ள மூன்றாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டு முடியும் தருவாயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

இவ்வழக்கு வரும் 7ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. அது முடிந்த பிறகு பணிகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பழைய பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்ய 100 வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்னும் 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்'' என்றும் தெரிவித்துள்ளார்.