தமிழ்நாடு

அங்கன்வாடி மைய மதிய உணவில் பல்லி: 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அங்கன்வாடி மைய மதிய உணவில் பல்லி: 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

kaleelrahman

ஆம்பூர் அருகே அங்கன்வாடி மைய மதிய உணவில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் 33 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், இன்று 17 குழந்தைகள் மையத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் இன்று கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது அதில் சில குழந்தைகள் உணவு சாப்பிடுவதில்லை என்பதால் மதிய நேரங்களில் பெற்றோர்களே வந்து உணவு ஊட்டி விடுவது வழக்கம்.

இந்நிலையில் சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் தனது மகள் ஜனனிக்கு மதிய உணவு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது அதில் பல்லி இருந்ததாக அங்கன்வாடி ஆசிரியை அஞ்சலியிடம் முறையிட்டுள்ளார. உடனடியாக இந்த தகவல் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென சில குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து 14 குழந்தைகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 13 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அங்கன்வாடி திட்ட இயக்குனர் கோமதி, சுகாதார ஆய்வாளர் மனோகரன் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர் சந்தோஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் இருந்த உணவை, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் அங்கன்வாடி ஆசிரியை அஞ்சலி மற்றும் சமையலர் மல்லிகாவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.