குரங்கணி தீ விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், பலர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் அவர்கள் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குரங்கணி தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி கூறியுள்ளார். மொத்தம் 36 பேர் மலையேற்றம் சென்றுள்ளதாகவும், எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கியதாக தெரிவித்தார்.
தீ விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த மோனிஷா தனபால், விஜயலட்சுமி, சஹானா, நிவேதா, பூஜா, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, நேகா, பிரபு உள்ளிட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் தீக்காயம் அடைந்த அனு வித்யா, கண்ணன், நிஷா, தேவி ஆகிய நால்வருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இலக்கியா, சபிதா, சுவேதா உள்ளிட்டோர் தேனி மற்றும் போடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.