Tasmac pt desk
தமிழ்நாடு

தமிழகத்தில் உச்சம்தொடும் மது விற்பனை... மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும் (!) என எதிர்பார்க்கப்படுகிறது.

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் மதுபானங்கள், விடுமுறை தினங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனையாகிறது. அதேபோல் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இதேபோன்று தேர்தல் காலங்களிலும் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமான ஒன்றாகும்.

tasmac

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தமிழகத்தில் மது விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது விற்பனையாகி வருகிறது.

மதுவிற்பனை 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் பீர் வகைகள் ரூ.511 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,313 கோடிக்கும் விற்பனையானது. மார்ச் மாதத்தில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடி என ஒரே மாதத்தில் ரூ.4,475 கோடிக்கு விற்பனையானது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.8,299 கோடிக்கு டாஸ்மாக்கில் விற்பனை நடந்துள்ளது. ஒருபக்கம் கோடை வெயில் வறுத்தெடுப்பதாலும், மற்றொரு பக்கம் தேர்தல் பணிகளின் அழுத்தத்தாலும் மது விற்பனை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாத மது விற்பனை ரூ.5 ஆயிரம் கோடியை எட்டி புதிய உச்சத்தை அடையுமென டாஸ்மாக் பணியாளர்கள் கணித்துள்ளனர்.