புதுக்கோட்டை டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அண்டை மாவட்டமான தஞ்சாவூரில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கிருந்து வந்தும் பலர் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் இன்று முதல் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 144 அரசு மதுபான கடைகளும் இன்று காலை 10 மணிமுதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களும் காலை முதலே மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த 35 நாட்களுக்கு மேலாக மதுபான கடைகள் மூடப்பட்டிருந்ததால் மது கிடைக்காமல் இருந்த மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதிக்காத காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை பகுதியான கைகாட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடைகளில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்குத் தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.